உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள் - பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை


உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள் - பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை
x

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியின் 38-ம் ஆண்டு விளையாட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

சென்னை,

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியின் 38-ம் ஆண்டு விளையாட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, 2 வெள்ளை நிற புறாக்களை வானில் பறக்கவிட்டார்.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம், கராத்தே ஆகிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த அமைச்சர், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

"நிறைய குழந்தைகள் இன்றைக்கு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும். அவர்கள் சொல்லும் காரணம் எங்களுக்கு மன அழுத்தமாக இருக்கிறது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அது அப்படி கிடையாது. ஆன்லைனில் விளையாண்டு அதற்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் இதுபோன்ற விளையாட்டுக்களை ஊக்குவிக்க வேண்டும். கண்டிப்பாக மதிப்பெண் தேவை. படிக்கணும். வேண்டாமென்று சொல்லவில்லை.

நான் பெற்றோருக்கு வைக்க விரும்புகிற வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். தயவுசெய்து நம்முடைய குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள்" என்று கூறினார்.


Next Story