தமிழக கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சனம்: தி.மு.க. பேச்சாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை - போலீஸ் டி.ஜி.பி.க்கு அண்ணாமலை புகார் மனு


தமிழக கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சனம்: தி.மு.க. பேச்சாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை - போலீஸ் டி.ஜி.பி.க்கு அண்ணாமலை புகார் மனு
x

தமிழக கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த தி.மு.க. பேச்சாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புகார் கடிதம் அளித்துள்ளார்.

சென்னை

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதிய புகார் மனுவை அளித்தார். இதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

பொதுமேடைகளில் பெண்களை அவதூறாக பேசுவது தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது.

போலீஸ்துறை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக இயங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஆளும் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக இயங்கி தங்கள் அடிப்படை பொறுப்புகளை மறந்து இன்று போலீஸ்துறை செயலற்று போய் இருக்கிறது. இழிவான மேடை பேச்சுகளுக்கு பெயர் பெற்ற தி.மு.க. ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக கவர்னரை அவதூறாக பேசியதுடன், அவரது பேச்சில் கவர்னரை சொல்லுதலுக்கு ஆகாத தகாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளதை போலீஸ்துறை கண்டும், காணாமல் இருப்பது கவலையளிக்கிறது.

அவர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கருத்துகள், கருத்து சுதந்திரம் என்று கருதப்படக் கூடாது.

நீண்டகாலமாக தி.மு.க.வினர் பொதுமேடைகளை தரக்குறைவான பேச்சுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இதுபோல நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story