அமைச்சரவை மாற்றம்: திராவிட மாடல் வாரிசு அரசியலை மையப்படுத்தியது என்பதை நிரூபிக்கிறது - வானதி சீனிவாசன் கருத்து


அமைச்சரவை மாற்றம்: திராவிட மாடல் வாரிசு அரசியலை மையப்படுத்தியது என்பதை நிரூபிக்கிறது - வானதி சீனிவாசன் கருத்து
x

கட்சியில் இருக்கின்ற ஒரு தலைவரின் மகனை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அமைச்சரவையிலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாள்ளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழக அமைச்சரவையில் புதிதாக ஒரு அமைச்சர்(டி.ஆர்.பி. ராஜா) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியிருப்பவர், அரசியல் ரீதியாகவும் அனுபவம் உள்ளவர். அவருக்கு சட்டமன்றத்தின் சக உறுப்பினராக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயம் திராவிட மாடல் என்பது சமூக நீதியை அடிப்படையாக கொண்டது என்று தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால், அது சமமான நீதியாக இருக்க வேண்டும்.

பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் ஒருவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி அல்லது அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களில் ஒன்றை வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் முதல்-அமைச்சருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோரிக்கை வைத்திருந்தேன்.

ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் கட்சியில் இருக்கின்ற ஒரு தலைவரின் மகனை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியது தான் என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது."

இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.



Next Story