சென்னையில் இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை
தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை உள்பட பகுதிகளுக்கு பிரதமர் மோடி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப்பின் கோவை வந்த பிரதமர் மோடி வாகன பேரணி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார். 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். 9ம் தேதி வேலூர் செல்லும் பிரதமர் மோடி அங்கு வாகன அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கிறார். அன்று மாலை தென்சென்னை செல்லும் பிரதமர் மோடி, பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
அதன்பின்னர், 10ம் தேதி நீலகிரி , கோவை, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தடையை விதித்துள்ளனர்.