பஸ் சக்கரத்தில் சிக்கி மருந்து விற்பனை பிரதிநிதி சாவு


பஸ் சக்கரத்தில் சிக்கி மருந்து விற்பனை பிரதிநிதி சாவு
x

வில்லுக்குறி அருகே மொபட்டில் சக ஊழியருடன் சென்று கொண்டிருந்த போது பஸ் சக்கரத்தில் சிக்கி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

வில்லுக்குறி அருகே மொபட்டில் சக ஊழியருடன் சென்று கொண்டிருந்த போது பஸ் சக்கரத்தில் சிக்கி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக இறந்தார்.

மருந்து விற்பனை பிரதிநிதி

நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழதெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருந்து ஏஜென்சியில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டி செல்ல ஆபத்துகாத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.

அரசு பஸ் உரசியது

அவர்கள் வில்லுக்குறி பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரே வந்த போது பின்னால் வேகமாக வந்த ஒரு அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பக்கவாட்டு பகுதி மொபட்டில் உரசியது.

இதில் மொபட்டில் வந்து கொண்டிருந்த இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்துகாத்தபிள்ளை பஸ்சின் அடியில் சிக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலை மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். முருகன் காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து முருகன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியைச் சேர்ந்த சிந்துகுமார் (52) மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story