போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

திறமையான போலீஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதி, மத, இன மோதல்கள் இன்றி மக்கள் சகோதரத்துவத்துடன் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பட்டியலின மக்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

பட்டியலின மக்கள் தாக்குதல் என்ற நிலை மாறி, நாங்குநேரி, கரூர் என்று பல இடங்களில் பட்டியலின மாணவர்களும் தாக்கப்படுவது சர்வசாதாரணமாகி உள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் தாக்கப்படுவது மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத அவலநிலை அரங்கேறி வருகிறது.

அதேபோல், நெல்லையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மத வழிபாட்டுத்தலத்தில் நடத்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள்முதல் சமூக விரோதிகளின் கொட்டமும், கொலைகளும் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 கொலைகளுக்கு மேல் நடந்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

அண்ணாநகர், அண்ணா டவர் பூங்காவில் ஒரு தன்னார்வ அமைப்பு நடத்திய ஓவியக்காட்சி அரங்கங்களை பார்வையிட வந்த சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தி.மு.க. நிர்வாகி பணம் கேட்பது தி.மு.க. அரசின், ஆளும் கட்சி நிர்வாகிகளின் அடாவடிகளுக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நிலை உருவாகி வருகிறது.

தி.மு.க. அரசின் 28 மாத கால ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டோடு, கஞ்சா போன்ற போதை மருந்துகளின் நடமாட்டம் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சென்னை, பெரம்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரை, ஒருசில மாணவர்கள் சுற்றிவளைத்து தாக்கியது, புழல் சிறையில் துணை ஜெயிலர் ஒருவரை வெளிநாட்டுக் கைதி தாக்கிய கேவலம், தி.மு.க. அரசின் 28 மாதகால ஆட்சிக்கு பிறகும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப்பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன.

இனியாவது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story