திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

திருவள்ளூர்

கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவான 3,231 மில்லியன் கனஅடியில் தற்போது 1,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர் வரத்துக் கால்வாய்கள் மூலமாக 330 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் மெட்ரோ குடிநீர் தேவைக்காக 289 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் தற்போது 2,178 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. 258 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 202 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கனஅடியில் 428 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 12 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 220 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 2,403 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர், மழை நீர் என மொத்தம் 1,146 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் 425 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story