மின் கழிவுகளை கையாளுபவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


மின் கழிவுகளை கையாளுபவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

மின் கழிவுகளை கையாளுபவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு செயல்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

மின் கழிவு மேலாண்மை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மின் கழிவு மேலாண்மை விதிகளை அக்டோபர் 1-ந் தேதி 2016 முதல் நடைமுறைபடுத்தியது. மின் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களால், மறுசுழற்சி செய்பவர்கள் மட்டுமே மின் கழிவுகளை சேகரித்து செயல்படுத்த முடியும்.

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

அபராதம்

மின் கழிவு மேலாண்மை விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

எனவே மின் கழிவுகளை கையாளுபவர்கள் மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தை தவிர்க்குமாறும் மேலும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு செயல்பட வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story