உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விடுதலை
கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 750 பேரை போலீசார் விடுதலை செய்தனர்.
சென்னை,
சட்டசபையில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் அடைத்து வைத்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 750 பேரை போலீசார் இன்று மாலை விடுதலை செய்தனர்.