அ.தி.மு.க.வில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - கோவை செல்வராஜ்


அ.தி.மு.க.வில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - கோவை செல்வராஜ்
x

அதிமுகவின் தலைவர் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தான், அதற்கு பிறகே எடப்பாடி பழனிசாமி என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை வருகிறது.

இதேபோல் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் தலைவர் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தான், அதற்கு பிறகே எடப்பாடி பழனிசாமி என்று ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தலைமை கழகம் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இன்றி அழைப்பிதழ் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாததால் அது செல்லாது.

பொதுக்குழு அழைப்பிதழை தன்னிச்சையாக யாரும் அனுப்ப முடியாது. அப்படி யாரும் அனுப்பினால் அது செல்லாது. எந்த கையெழுத்தும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதால் அழைப்பிதழ் போலியா என சந்தேகம் எழுகிறது. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் எடப்பாடி பழனிசாமியே காரணம்.

எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை என்று கட்சியில் குழப்பம் விளைவித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். அந்த இடத்திற்கு யாரும் வர முடியாது.

ஒ.பன்னீர் செல்வம் பற்றி பேசுவதை ஜெயக்குமார் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பேசினால் அவர் பேச்சுக்காக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பழனிசாமி தரப்பிற்கு அதிமுகவைப் பற்றியும் கவலை இல்லை. இரட்டை இலை சின்னம் பற்றியும் கவலை இல்லை. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ பன்னீர் செல்வம் தான். அதிமுகவின் தலைவர் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தான், அதற்கு பிறகே எடப்பாடி பழனிசாமி" என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார்.


Next Story