கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - கரூரில் சோகம்


கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - கரூரில் சோகம்
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பெரிய மஞ்சுவலி கிராமம் நெல்லிக்கோம்பையை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 72). இவரது மனைவி மாரியம்மாள் (65). இந்த தம்பதிக்கு ராஜாமணி என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். ராஜாமணி தனது கணவருடன் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியிலும், சுப்பிரமணி தனது மனைவியுடன் நெல்லிக்கோம்பையிலும் வசித்து வருகின்றனர். சுப்பிரமணி பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால் வெள்ளையன்-மாரியம்மாள் தம்பதியை பார்க்க யாரும் இல்லாத நிலையில், வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு தனியாக வீட்டில் வாழ்ந்து வந்தனர். மேலும், மாரியம்மாள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், வெள்ளையன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த வெள்ளையன், மாரியம்மாள் தம்பதியினர் நேற்று தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வெள்ளையன், மாரியம்மாள் தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story