மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்ட மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். பொருளாளர் ராமதாஸ் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழில் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதிய பதவிகள் வேண்டும்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அவுட் சோர்சிங் முறையிலான பணி நியமனத்தை கைவிட வேண்டும், ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய பதவிகளை வழங்க வேண்டும், முத்தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், 14.4.2022 அறிவிப்பாணையை ரத்து செய்து தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்பை கைவிட வேண்டும், மின்சார வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.