சைதாப்பேட்டையில் மேற்கூரை சரிந்து ஊழியர் பலி: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது - உரிமையாளர் தலைமறைவு


சைதாப்பேட்டையில் மேற்கூரை சரிந்து ஊழியர் பலி: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது - உரிமையாளர் தலைமறைவு
x

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து ஊழியர் பலியான வழக்கில் பங்க்கின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென்று சரிந்து விழுந்தது. கன நேரத்தில் இந்த விபத்து அரங்கேறியது.

இதில் பங்க் ஊழியர்களும், பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளும், மழைக்கு ஒதுங்கிய பொதுமக்களும் சிக்கினார்கள். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பெட்ரோல் பங்க் என்பதால் மீட்பு பணிக்கு 'வெல்டிங்' எந்திரங்களை பயன்படுத்தாமல், ஜே.சி.பி. எந்திரம் மூலம் மேற்கூரை தூக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றது.

இந்த விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரான மதுராந்தகத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 63) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை உள்பட 18 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேற்கூரை விழுந்ததில் 14 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.

விபத்து நடைபெற்ற பெட்ரோல் பங்க்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக பார்வையிட்டார். மேலும் அவர், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இந்த விபத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'சரிந்து விழுந்த மேற்கூரை 17 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 2 தூண்களில் மட்டும் நின்றுள்ளதால் பலம் இழந்து சரிந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் பங்கின் மேற்கூரை பலமாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

பலம் இல்லாமல் இருந்த மேற்கூரையை கவனிக்காமல் விட்டதே விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் அசோக், மேலாளர் வினோத் ஆகிய 2 பேர் மீது அஜராக்கிரதையாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேலாளர் வினோத் நேற்று கைது செய்யப்பட்டார். உரிமையாளர் அசோக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

உயிர் பலி வாங்கிய பெட்ரோல் பங்க்கை சுற்றிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து 'சீல்' வைத்துள்ளனர். கொட்டும் மழையில் சாலையில் வாகனங்கள் பரபரப்புடன் சென்றுக் கொண்டிருந்த நிலையில், இந்த பங்க்கின் மேற்கூரை சரிந்து விழும் அதிர்ச்சிக்குரிய கண்காணிப்பு கேமரா காட்சி நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story