எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு


எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
x

கோரமண்டல் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவுக்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்தியது.

சென்னை,

எண்ணூர் வாயு கசிவுக்கு காரணமான தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவுக்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்தியது.

இந்தக்குழு தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதாவது, தொழிற்சாலையில், கடலுக்கு அடியில் தற்போதுள்ள அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்கு பதில் புதிய குழாய்கள் அமைக்கப்பட வேண்டும்.

கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் குழாய் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அம்மோனியா கசிவு ஏற்பட்டால் ஆலையை சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் தொழிற்சாலையின் அனைத்து திசைகளிலும் மற்றும் கடற்கரையிலிருந்து சாலை வழியாக ஆலைக்கு செல்லும் குழாய்க்கு அருகிலும் அம்மோனியா சென்சார்கள் அமைக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலை உள்ளேயும் வெளியேயும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த அவசர தயார்நிலை அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலை தயாரிக்க வேண்டும்.

அம்மோனியா வாயுக் கசிவின் தாக்கத்தை குறைக்க, அம்மோனியா செல்லும் குழாய்களில் தானியங்கி நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.

அம்மோனியா வாயு குழாயில் கசிவு ஏற்படும்போது உடனடியாக அதன்செயல்பாட்டினை நிறுத்துவதற்கான தானியங்கி கருவிகள் நிறுவப்பட வேண்டும்.

விபத்துகள் மற்றும் ஆலையில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளின் போது அருகிலுள்ள கிராமங்களில் மக்களை எச்சரிக்க அதிக ஒலி ஏற்படுத்தும் ஒலி எழுப்பான்கள் தொழிற்சாலைகளால் அமைக்கப்படவேண்டும்.

அம்மோனியா வாயுவினை கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் சமயங்களில், தொழிற்சாலையின் 2 கி.மீ. சுற்றளவில் காற்றில் அமோனியா வாயு அளவினை ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் கண்காணிப்பு செய்து தொழிற்சாலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் இயக்குனர்-தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்துக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ. 5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்பக் குழுவின் இந்த பரிந்துரையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story