சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த கல்வி ஆண்டில் பள்ளிக்கு செல்வது முதல் நாள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் பலர் தங்கள் வீடுகளில் உள்ள சாமி படங்கள் முன்பு சூடம் ஏற்றி வைத்து சாமி கும்பிட்டு தங்கள் மகன், மகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவ, மாணவிகளை வரவேற்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாடப்புத்தகங்கள்
அதன்படி சேலம் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வாய்க்கால் பட்டறை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்று கிரீடம் அணிவித்து, சிறப்பு நாற்காலியில் அமரவைத்து அவர்களுக்கு இனிப்பு வழங்கினர். அதேபோன்று சேலம் 4 ரோடு சிறுமலர் பள்ளி நுழைவுவாசல் முன்பு வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு மாணவ, மாணவிகளை ஆசிரிய, ஆசிரியைகள் கைகுலுக்கி வரவேற்றனர்.
சேலம் குகை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணக்காடு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு நெற்றியில் திலகமிட்டு இனிப்பு வழங்கி வரவேற்று பள்ளி அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி தொடங்கிய முதல் நாளே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று மாவட்டம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.