பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்


பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உரிமைத்தொகை திட்டம்

விருதுநகர்

அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.

இந்த உரிமைத்தொகைகளை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களது கைகளில் உறுதியாக கிடைக்கப்போகிறது என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

இவ்வாறு கிடைக்கும் பணத்தை பலர் உடனே செலவு செய்துவிட்டாலும் சிலர் வங்கிக்கணக்குகளில் இருப்பு வைத்து ஆனந்தப்படுகிறார்கள்.

இது மறைமுகமாக அவர்களிடம் ஒரு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. இதுபற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் இல்லத்தரசிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

தாயில்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி ராஜேஸ்வரி:-

உரிமைத்தொகை இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்குவதற்கு ஆயிரம் ரூபாய் மிகவும் உதவியாக இருக்கிறது. மருத்துவ செலவிற்கும் உதவுகிறது. இதுவரை உறவினரிடம் வாங்கி செலவு செய்தேன். தற்போது இந்த தொகையே போதுமானதாக உள்ளது

யாரையும் எதிர்பார்க்காமல் சிறு, சிறு தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் உதவியாக உள்ளது.

சிவகாசியை சேர்ந்த சசிகலா சுந்தரமகாலிங்கம்:-

எனக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகின்றன. கணவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எனது மகள் தற்போது 2-ம் வகுப்பு படித்து வருகிறார். எனது மகளின் கல்வி செலவிற்கும், வருங்காலத்தில் அவளுக்கு திருமணம் செய்து வைக்கவும் நான் இப்போது சேமிக்க தொடங்கி விட்டேன்.

அரசின் பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் எனது மகள் பெயரில் கணக்குத் தொடங்கி சேமித்து வருகிறேன். இதற்காக பணம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சேமிப்பு எனது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்படைய செய்துள்ளது.

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த பாத்திமா வைரம்:-

என்னை போன்ற இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை என்று வழங்கினாலும் உதவித்தொகையாகவே பயன்பட்டு வருகிறது. மாதம்தோறும் பல்வேறு வீட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த தொகை எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.

வாய்ப்பு ஏற்படும் பொழுது மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கவும் வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் எங்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும், வாய்ப்பையும் இந்த உரிமைத்தொகை ஏற்படுத்தி தந்துள்ளது.

இல்லத்தரசி ஹரிப்பிரியா:- குடும்ப தலைவிகளுக்கு அரசு தரும் ஆயிரம் ரூபாய் வரவேற்கத்தக்க ஒன்று தான். குடும்ப தலைவர்கள் வரவு செலவு செய்வதுதான் அதிகம். அதிக பெண்கள் வங்கிகளில் வரவு செலவு வைத்திருப்பதில்லை. பெண்களுக்கு வங்கி கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப்படுவதால் பெண்கள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர். தங்களது குடும்ப தலைவர்கள் தங்களுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தினை வங்கிகளில் சேர்த்து வைக்க வழிவகை செய்த தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டியது அவசியம். இருப்பினும் விடுபட்ட குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் சி.பி.கிருஷ்ணன்:-

'அடிப்படை தேவைக்கு மேல் இருப்பவர்கள்தான் சேமிக்கிறார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தும் தொகையை பெற 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை குறைந்தபட்சம் 200 பேருக்கு மேல் வங்கி கிளைகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பணத்தை எடுக்கின்றனர். 10 சதவீதம் பேர் பணத்தை சேமிக்கின்றனர். இதுப் படிப்படியாக மாறி, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story