சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டாலும் சொந்த ஊர்களுக்கு செல்ல கடைசி நேரத்தில் அல்லல்படும் மக்கள் - கூடுதல் வசதி செய்துதர கோரிக்கை


சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டாலும் சொந்த ஊர்களுக்கு செல்ல கடைசி நேரத்தில் அல்லல்படும் மக்கள் - கூடுதல் வசதி செய்துதர கோரிக்கை
x

சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டாலும் சொந்த ஊர்களுக்கு செல்ல கடைசி நேரத்தில் மக்கள் அல்லல்படும் நிலையே நீடிக்கிறது. கூடுதல் வசதி செய்துதர பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பண்டிகை காலம் வந்தாலே அனைவரது மனதிலும் சொந்த ஊரின் நினைவுகள் நிழலாடும். அதிலும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடவே மக்கள் விரும்புவார்கள்.

தலைநகர் சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள்தான். கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்னையில் அடைக்கலமாகியுள்ள அவர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.

தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் சொந்த ஊருக்கு செல்ல இறக்கை கட்டாத குறையாத பறப்பார்கள். அந்தவகையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை சொந்த ஊருக்கு செல்ல காட்டும் ஆர்வம் அளவிட முடியாதது.

அல்லல்படும் மக்கள்

மக்களின் தேவையை கருத்தில்கொண்டு தீபாவளி சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த 22-ந்தேதி முதல் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பயணிகள் கூட்டம் ஓய்ந்தபாடில்லை. தேவை கருதி தொடர்ந்து பஸ்கள் வெளியூர் நோக்கி இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல ரெயில் நிலையங்களிலும் பயணிகள் சாரை சாரையாக படையெடுத்தபடி இருக்கிறார்கள்.

அதன்படி, இந்த ஆண்டு தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு செல்வதற்காக விரல் விட்டு எண்ணும் வகையிலேயே சிறப்பு ரெயில்களை அறிவித்திருக்கிறது. இப்படியாக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் என ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டாலும், சொந்த ஊர்களுக்கு செல்ல கடைசி நேரத்தில் மக்கள் அல்லல்படும் நிலையே நீடிக்கிறது.

பண்டிகை காலங்களில் இவர்களை போன்றவர்களுக்கு 'சுகமான பயணம்' என்பது கனவாகவே போய்விடுகிறது.

அந்தவகையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களை நோக்கி நேற்று பயணித்த பஸ், ரெயில் பயணிகளிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

அதிகாரிகள் உணருவார்களா?



ரெயில் பயணி பிரதீப்ராஜ் (பரமக்குடி):-

முட்டி மோதி, இடம் கிடைத்தால்கூட பரவாயில்லை. ஆனால் நின்றுகொண்டே பயணிக்கும் பயணத்துக்கே இங்கு கடும் போட்டியிட வேண்டியிருக்கிறது. அதிகளவு பணம் கொடுத்து பயணிக்கும் அளவுக்கு வசதி இருப்பவர்களுக்கு எங்கள் பிரச்சினை புரியாது. பண்டிகை காலத்திலாவது முன்பதிவில்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்கலாம். எங்களை போன்ற இளைஞர்கள், தனிநபர்கள் இப்படி நின்று கொண்டும், தொங்கியபடியும் பயணம் செய்துவிட முடியும். குடும்பத்துடன் வருபவர்களின் நிலையை யோசித்து பாருங்கள். கழிவறைக்கு கூட செல்ல முடியாது. இப்போது எப்படி ஏறி நிற்கிறோமோ? அதே நிலைதான் இறங்கும் வரையில்... தலைவிதியை மாற்ற முடியாது. எப்போதுதான் இதை அதிகாரிகள் உணருவார்கள்.

உரிய ஏற்பாடுகளை...



பஸ் பயணி அஞ்சலி பாண்டிகுமார் (மதுரை) :-

நாங்கள் முன்கூட்டியே டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டோம். அதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இதர பயணிகள் பஸ்களுக்காக முண்டியடித்து வருகிறார்கள். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஊருக்கு புறப்பட்டு செல்ல உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். அப்போது தான் பயணிகள் நிம்மதியாக புறப்பட்டு செல்லமுடியும். இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் கூட்டம் இன்னும் அலைமோதும் வாய்ப்பு இருக்கிறது.

சொல்லித்தான் தெரியவேண்டுமா?



ரெயில் பயணி முத்து (அருப்புக்கோட்டை) :-

தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் முன்பதிவில்லா அந்தியோதயா ரெயில்களை போல, பண்டிகை காலங்களில் மட்டுமாவது, கூடுதலாக இந்த ரெயில்களை இயக்கலாம். இதில் பெரும் வணிகமே அடங்கி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இதை செய்ய மறுக்கிறார்கள். குறைந்தபட்சம் மதுரை வரைக்குமாவது முன்பதிவில்லா ரெயில்களை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கினால், அங்கிருந்து அவரவர் மாற்று பயணம் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். இது சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை.

வரும் நாட்களில்...


பஸ் பயணி பிரியா நாகராஜன் (மதுரை):-

இன்றே இப்படி கூட்டம் அலைமோதுகிறது. நாளை (இன்று) இதைவிட கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு பஸ்சிலும் பயணிகள் முண்டியடித்து ஏறி செல்கிறார்கள். வரும் நாட்களில் போதுமான ஏற்பாடுகளை செய்து தந்தால் மட்டுமே பயணிகள் நிம்மதியான பயணத்தை ஏற்கமுடியும். இல்லையெனில் சிரமத்தை எதிர்கொண்டுதான் செல்ல வேண்டும்.

பரிதாபமே மிச்சம்



ரெயில் பயணி தஞ்சம்மா (மணலி) :-

என்னை போன்ற வயதானவர்கள் இவ்வளவு கூட்டத்தில் முன்பதிவில்லா பெட்டியில் எப்படி ஏற முடியும்?. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காமல் இருப்பதற்கு, என்ன சொன்னாலும் சரியாகிவிடாது. ஒரு நாள் அதிகாரிகளை இதில் பயணித்து பார்க்க சொல்ல வேண்டும். அப்போதுதான் எங்களின் நிலைமை தெரியும், இதற்கு ஒரு நடவடிக்கையோ அல்லது வசதியோ செய்து தருவார்கள். அதுவரை எங்களுக்கு பரிதாப நிலைதான் மிச்சம். பழகிப்போய்விட்டது. அவர்களும் பழகிவிட்டார்கள் என சாதாரணமாக இந்த விஷயத்தில் கடந்து சென்றுவிடுகிறார்கள்.

நடவடிக்கை வேண்டும்



பஸ் பயணி எல்.பவன்குமார் (பெங்களுரு) :-

எத்தனை பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை. நெரிசலில் சிக்கிதான் பயணத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே அரசு போதுமான பஸ்களை அறிவித்து பயணிகளின் சிரமங்களை போக்கவேண்டும். ஏனெனில் டிக்கெட் எடுக்காமல் வரும் பயணிகளை சமாளிப்பது பெரிய சிரமமாக உள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், பஸ் நிலைய வளாகத்தை இன்னும் சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.


Next Story