காஞ்சீபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்


காஞ்சீபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
x

காஞ்சீபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கூட்டம் தொடங்கியதும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் அறிக்கை ஒன்றை வாசிக்க தொடங்கினார். அப்போது விவசாயிகள் சங்க செயலாளர் நேரு எழுந்து அந்த அறிக்கை தொடர்பாக பேச எழுந்தபோது வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் நீங்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர். கட்டப்பஞ்சாயத்து போல பேசக்கூடாது. அமருங்கள் என்று சொன்னார். இதை கேட்டதும் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் பலரும் கோபம் அடைந்தனர்.

கட்டப்பஞ்சாயத்து என்ற வார்த்தையை வாபஸ் வாங்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வோம் என்று விவசாயிகள் அனைவரும் கூறினார்கள். அதிகாரிகள் சமாதானம் செய்தும் விவசாயிகள் அதை பொருட்படுத்தாமல் கூச்சலிட்டனர்.

இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் ஆர்த்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தார். அவரிடம் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் கூறிய வார்த்தையை வாபஸ் வாங்க சொல்லுமாறு விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு இது பற்றி நான் விசாரிக்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் விவசாயிகளிடம் தெரிவித்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியதை தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது.


Next Story