கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சிக்குட்பட்ட குளம், குட்டை, ஊரணி, ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களையும், முள் செடிகளை, மரங்களை அகற்றி வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நிதி ஆண்டில் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு ஏற்கனவே காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை பெற்று கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டருக்கு ஊட்டச்சத்தை கணக்கீட்டு ரூ.1 உயர்த்தி வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பது பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றும் செயல். ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.45-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் மூலமாக 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரும்பிற்கான பணத்தை ஆலை நிர்வாகம் உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு அறிவித்த ஊக்க தொகையை பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இது தொடா்பான மனுவினை மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் வழங்கினர்.