பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்...!


பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 23 Dec 2022 8:50 AM GMT (Updated: 23 Dec 2022 8:50 AM GMT)

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, ரவை, கோதுமை மற்றும் மஞ்சப்பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளில் பலர் கரும்புடன் போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story