கணவர் கண்முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் தொழிலாளி பலி


கணவர் கண்முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் தொழிலாளி பலி
x

கணவர் கண்முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் துப்புரவு தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த திலகவதி (வயது 34) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திலகவதி அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ந் தேதியன்று குமார் மனைவி திலகவதியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு வேலை செய்யும் இடத்தில் விடுவதற்காக சென்றார். அப்போது, அவர்கள் உளுந்தை சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கும்போது, பின்னால் அமர்ந்திருந்த திலகவதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (49). இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் ஊழியம் செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியன்று சாலமன், திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் ஜங்ஷன் அருகில் வந்து கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

சென்னை ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜூபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோட்சலிங்கம் செட்டி. (61). இவர் கடந்த 4-ந் தேதி வீட்டுக்கு தேவையான பொருட்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் குமார ராஜூ பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ சென்றபோது மோட்சலிங்கம் செட்டி ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மோட்சலிங்கம் செட்டி பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story