எழும்பூரில் ஏ.சி.யில் மின்கசிவால் தனியார் கிளப்பில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கிளப்பில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலையில் தனியார் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள மேலாளர் அறையில் நேற்று காலையில் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது. நேரம் செல்ல செல்ல அறை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை எழும்பூர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேளையாக அந்த நேரத்தில் கிளப்பில் ஆட்கள் யாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
தனியார் கிளப்பின் மேலாளர் அறை என்பதால், கிளப் தொடர்பான ஆவணங்கள் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என தெரிகிறது. தீயணைப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'கிளப் மேலாளர் அறையில் இருந்த ஏ.சி.யை இயக்கிய போது ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்கசிவை சரிசெய்வதற்காக எலக்ட்ரீசியன் வருவதற்குள் தீ மளமளவென பரவி எரிய தொடங்கிவிட்டதாகவும்' தெரிய வந்துள்ளது.
கட்டிடத்தின் கீழ்தளத்தில் சமையல் அறை செயல்பட்டு வருகிறது. மேல் தளத்தில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டதால் மற்ற இடங்களுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று அந்த சாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.