ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை.. மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை


ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை.. மீறினால்  3 ஆண்டுகள் வரை சிறை
x

தடையை மீறி ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை:

ரெயில்களில் பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடை அமலில் உள்ளது. ஆனாலும் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.

இதுதொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிமருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. தடையை மீறி பட்டாசு எடுத்துச்சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு எடுத்து செல்பவர்கள் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதங்கள் ஜெயில் தண்டனை வழங்கப்படும்.

அதன்பிறகும் தொடர்ந்து இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அடுத்த வாரம் ரெயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.

பட்டாசு எடுத்து செல்வதை தடுக்க பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனையிடப்படும். மேலும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உள்ளோம் என அவர் கூறினார்.


Next Story