கொட்டகையில் பட்டாசுகள் வெடித்து சிதறல் - பெண் பலி


தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 3:05 PM IST)
t-max-icont-min-icon

கொட்டகையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பெண் பலியானார்.

சிவகங்கை

எஸ்.புதூர்

கொட்டகையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பெண் பலியானார்.

ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே இரணிபட்டி ஈச்சமலை பகுதியில் ஒரு இடத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. எனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

அப்போது, ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை சின்னாபின்னமாகிக் கிடந்தது. அங்கு தீயும் எரிந்து கொண்டிருந்தது.

அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி மீனா (வயது 47), வெடி விபத்தில் சிக்கி பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

பரிதாப சாவு

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் மின் மோட்டார் மூலமாக நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மீனாவை மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், வெடிவிபத்து நடந்த இடம் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த வலைச்சேரிபட்டி கிராமத்தை சேர்ந்த முருகனுக்கு சொந்தமானது என்பதும், அந்த இடத்தில் 2 கொட்டகைகள் அமைத்து அனுமதியின்றி பேன்சி ரக வெடிகளை அவர் சேமித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. எனவே மற்றொரு கொட்டகையில் வைத்திருந்த வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிகள் வெடித்ததில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story