விதிகளை பின்பற்றினாலே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும்-போலீசார் அறிவுறுத்தல்


விதிகளை பின்பற்றினாலே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும்-போலீசார் அறிவுறுத்தல்
x

விதிகளை பின்பற்றினாலே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழில் பட்டாசு. இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் இப்போதே தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளுக்கு வந்து பட்டாசு வாங்குவதையே பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சிவகாசி நகர் பகுதி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் அதிக அளவில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக பட்டாசு கடைகளில் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கலந்துரையாடல் கூட்டம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வந்த ஒரு பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசமானது. இது போன்ற விபத்துகள் நடக்கக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் உத்தரவின்படி சிவகாசி போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.

இதில் விதிகளை மீறியும் அஜாக்கிரதையாகவும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸ் அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வை ஒரு சில பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் பின்பற்ற தவறிய நிலையில் சிவகாசி பகுதியில் தற்போது வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற விபத்துகளில் உயிர் சேதம் பெருமளவில் இல்லை என்றாலும் பொருட்சேதம் அதிகமாக இருக்கிறது.

விழிப்புணர்வு

இனிவரும் காலத்தில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீஸ் நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள் வலியுறுத்தி வரும் விழிப்புணர்வு விதிமுறைகளை கடைபிடித்தாலே இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம். சிவகாசி உட்கோட்டத்தை பொறுத்தவரை போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் அதனை பின்பற்ற தயங்கும் ஒரு சிலரால் இது போன்ற விபத்துகள் நடக்கிறது. இனிவரும் காலங்களில் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களிலும் விற்பனை செய்யும் இடங்களிலும் தீ தடுப்பு நடவடிக்கையில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே இது போன்ற விபத்துகளும் உயிர் சேதங்களும் தவிர்க்க முடியும்.


Next Story