இலங்கை அரசால் மீனவர்கள் கைது; ராகுல் காந்தி பிரதமராகும்போது நிச்சயம் தீர்வு - புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு


இலங்கை அரசால் மீனவர்கள் கைது; ராகுல் காந்தி பிரதமராகும்போது நிச்சயம் தீர்வு - புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x

ராகுல் காந்தி பிரதமராகும்போது, இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

சென்னை

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில், இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடந்தது. அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., விஜய் வசந்த் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபை தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் இல்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மீனவர்கள் பற்றி கவலைப்படாமல் உள்ளது. மீனவர்கள் கைது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், எந்தவித நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராகும்போது மீனவர்களின் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தின்போது, விஜய் வசந்த் எம்.பி பேசுகையில், 'இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிரந்தர தீர்வுக்கு ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்' என்றார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.


Next Story