அரசு அதிகாரியுடன் 6 மாதங்களாக உல்லாசம்... லாட்ஜ்க்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த பரபரப்பு


அரசு அதிகாரியுடன் 6 மாதங்களாக உல்லாசம்... லாட்ஜ்க்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
x
தினத்தந்தி 23 May 2024 1:12 AM GMT (Updated: 23 May 2024 7:02 AM GMT)

உல்லாசத்துக்கு அழைப்பதாக கருதி வெங்கடேசன் ஆசை, ஆசையாய் லாட்ஜ்க்கு சென்று உள்ளார்.

மயிலாடுதுறை,

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 59). இவர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்(என்.ஐ.டி.), மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதனால் இவர் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவர் மனைவி சுபாஷினியுடன்(40) புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதங்களாக தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒவ்வொரு முறை காரைக்காலுக்கு செல்லும்போது சுபாஷினி தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி வெங்கடேசனிடம் சிறுக, சிறுக பணம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் இதேபோல் சிறுக, சிறுக பணம் வாங்குவதற்கு பதிலாக வெங்கடேசனிடம் இருந்து மொத்தமாக பணம் கறக்க சுபாஷினி திட்டமிட்டார். தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்த சுபாஷினி கடந்த மாதம் 27-ந் தேதி வழக்கம்போல் காரைக்கால் சென்று உள்ளார். அங்கு அவர்கள் இருவரும் வழக்கம்போல் உல்லாசமாக இருந்தனர். அப்போது வெங்கடேசனுக்கு தெரியாமல், தாங்கள் உல்லாசமாக இருந்த காட்சியை சுபாஷினி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி சுபாஷினி, வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். மறுமுனையில் போனை எடுத்த வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள லாட்ஜ்க்கு வருமாறு சுபாஷினி அழைத்து உள்ளார்.

சுபாஷினியின் திட்டத்தை உணராத வெங்கடேசன், வழக்கம்போல் சுபாஷினி தன்னை உல்லாசத்துக்கு அழைப்பதாக கருதி ஆசை, ஆசையாய் அங்கு சென்று உள்ளார். இதற்கிடையில் சுபாஷினி தனது கூட்டாளியான மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த கில்லி பிரகாஷ் என்கிற பிரகாஷ்(40) என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரை தனியார் விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவரது அழைப்பின்பேரில் கில்லி பிரகாஷ் தனது கூட்டாளிகளான மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்த முகமது நசீர்(39), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா தொற்குடி கிராமத்தை சேர்ந்த தினேஷ்பாபு (31) ஆகியோருடன் லாட்ஜ்க்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர்கள், சுபாஷினியுடன் சேர்ந்து கொண்டு வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது வெங்கடேசனிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை எடுத்து ஜிபே வாயிலாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து உள்ளனர். மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் மேலும் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டி அனுப்பி உள்ளனர்.

இது குறித்து வெங்கடேசன், நேற்று முன்தினம் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுபாஷினி, கில்லி பிரகாஷ், முகமது நசீர், தினேஷ் பாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கில்லி பிரகாஷ், முகமதுநசீர், தினேஷ்பாபு ஆகிய 3 பேரையும் மயிலாடுதுறை கிளை சிறையிலும், சுபாஷினியை திருவாரூர் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி மத்திய அரசு அதிகாரியிடம் பெண் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story