மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x

மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சேலத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் சுமார் 60 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது. இங்கு கல்வித்தரம் குறைவாக உள்ளது. எனவே, தான் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வினால் பயிற்சி மையங்கள் தான் பெருகி வருகிறது.

இந்தியாவில் பா.ஜ.க. பெரிய கட்சி. ஆனால் தமிழகத்தில் வளர்ந்து வரும் சிறிய கட்சியாக உள்ளது. ஆனால் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கன்னியாகுமரி தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. தி.மு.க.விற்கு பா.ஜ.க. எதிர்க்கட்சி இல்லை. நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கிறது. எனவே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா?. மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு போன்ற மாநில உரிமைகளுக்காக பா.ஜனதா போராட்டம் நடத்தாதது ஏன்?

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.


Next Story