புயலால் தள்ளிப்போன பார்முலா-4 கார் பந்தயம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு வெளியிட்ட தகவல்


புயலால் தள்ளிப்போன பார்முலா-4 கார் பந்தயம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு வெளியிட்ட தகவல்
x

பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் வரும் 9, 10-ம் தேதிகளில் பார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூறியது. இதனை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுத்திடலிலிருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் பந்தயம் நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்றன.

இந்த கார் பந்தயத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மிக்ஜம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கார் பந்தயத்தை வரும் 15, 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். பந்தயத்தை நடத்தும் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அவர் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story