பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி சென்னை ஆடிட்டரிடம் ரூ.50½ லட்சம் மோசடி
பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி சென்னை ஆடிட்டரிடம் ரூ.50½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனத்தில் முதலீடு
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டர். இவர் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலமாக சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மூலனூரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் அறிமுகமாகினர்.
இவர்கள் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீத வட்டி மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினர்.
2 பேர் மீது வழக்கு
இதை நம்பி 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தையும், இதைத்தொடர்ந்து ரூ.10 லட்சம், ரூ.32 லட்சம் என பல தவணைகளாக ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் முதலீடாக கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியவாறு லாபத்தொகையை தராமல் ஏமாற்றி வந்தனர். இதையடுத்து அவர்களுடைய அலுவலகத்துக்கு சென்று பணத்தை திருப்பி கேட்டபோது, என்னை மிரட்டினர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.