மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
x

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும்.

வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சிவகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி தொடங்கும் தேதி ஒவ்வொருக்கும் கைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.

பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story