பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை.. பலரை ஏமாற்றிய போலி இந்திய கிரிக்கெட் கேப்டன் மீது பாய்ந்தது வழக்கு.!


பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை.. பலரை ஏமாற்றிய போலி இந்திய கிரிக்கெட் கேப்டன் மீது பாய்ந்தது வழக்கு.!
x
தினத்தந்தி 27 April 2023 3:10 AM GMT (Updated: 27 April 2023 3:18 AM GMT)

வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு, தான் ஆசியகோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றதாக கூறி அமைச்சர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் முதல் அமைச்சரை சந்தித்து அரசு வேலையும் கோரியிருந்தார். முதல் அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பலரையும் ஏமாற்றிய வினோத் பாபுவின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலானது

இதனை தொடர்ந்து உண்மையான விளையாட்டு வீரர்கள் இவரின் மீது உளவுத்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் உளவுத்துறையினர் விசாரித்ததில், அவரிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும், அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலியான நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் உண்மையான வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவர் மீது 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story