பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - ராமதாஸ்


பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - ராமதாஸ்
x

வருவாய்த்துறையினரின் போராட்டம் தொடர்ந்தால் அரசு நிர்வாகம் செயலிழக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் அரசு நிர்வாகமும், மக்கள் சேவையும் பாதிக்கப்படும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படாமல் பாதுகாப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும், இளநிலை/முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையை வெளியிட வேண்டும், பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பிப்ரவரி 27-ம் நாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழக அரசுத்துறைகளில் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் ஒரே துறை வருவாய்த்துறை தான். மக்களுக்கான புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தும்போது, அதனால் வருவாய்த்துறையினரின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் வழங்கப்பட வேண்டும். அது வழங்கப்படாத நிலையில், மற்றொருபுறம் பல்வேறு நீதிமன்றங்களின் ஆணைப்படி வருவாய்த்துறையில் பணியாற்றும் பட்டதாரி அல்லாத அதிகாரிகள் பணியிறக்கம் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினர் கோருவது சரியானது தான். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஓராண்டாகியும் அரசு பரிசீலிக்கவில்லை.

காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது வருவாய்த்துறை அலுவலர்களின் நோக்கம் அல்ல. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதே கோரிக்கைகளை முன்வைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த ஆண்டு மே மாதம் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். அப்போதும், அதன்பின் 16.05.2023-ம் நாளும் வருவாய்த்துறை அலுவலர்களுடன், வருவாய்த்துறை அமைச்சர், நிதியமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோரும், அரசுத்துறை செயலாளர்களும் பேச்சு நடத்தினார்கள். அப்போது ஒரு மாதத்திற்குள்ளாக வருவாய்த்துறை அலுவலர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 9 மாதங்கள் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று கூட இதுவரை தமிழக அரசால் நிறைவேற்றப்படவில்லை.

அதன்பிறகும் கூட வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் இறங்கவில்லை. முதல்கட்டமாக கடந்த பிப்ரவரி 13-ம் நாள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்டத் தலைநகரங்களில் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர்; அதைத் தொடர்ந்து கடந்த 22-ம் நாள் முதல் அலுவலக வாயில்களில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். ஆனால், அத்தகைய போராட்டங்களுக்கு தமிழக அரசு செவிமடுக்காத நிலையில் தான் கடைசி ஆயுதமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரனே இது தொடர்பான பேச்சுகளின் போது ஒப்புக்கொண்டிருக்கிறார். நியாயமான அந்தக் கோரிக்கைகளை ஒன்பது மாதங்களாகியும் தமிழக அரசு நிறைவேற்ற மறுப்பது ஏன்? தமிழக அரசு நினைத்தால் வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகளை பிறப்பிக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் தாமதப்படுத்தி வருவதன் மூலம் வருவாய்த்துறையினரை தமிழக அரசு திட்டமிட்டு ஏமாற்றுகிறது என்று தான் பொருள்கொள்ள முடியும்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை அடுத்த இரு வாரங்களில் பிறப்பிக்கப்படவிருக்கிறது. அதன்பின்னர் வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. அதுமட்டுமின்றி, அவர்களின் போராட்டம் தொடர்ந்தால் அரசு நிர்வாகம் செயலிழக்கும்; மக்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களை பெற முடியாது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களை அரசு உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story