கணேசமூர்த்தி மறைவு: சொல்லொணாத் துயரத்தை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க.,வை சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தி.மு.க.வில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர்.
பின்னர், அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.