டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிய கும்பல்


டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிய கும்பல்
x
தினத்தந்தி 8 Sept 2023 1:27 AM IST (Updated: 8 Sept 2023 1:47 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது.

திருச்சி

துவாக்குடி:

அரிவாள் வெட்டு

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழமாங்காவனம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேலமங்காவனத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 47) மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த கடையின் முன்புள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்து, திருட்டு சம்பவம் நடந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அங்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்து அரிவாள் மற்றும் கத்தியுடன் இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல், பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் கல்லாவில் உள்ள பணத்தை கொடுக்குமாறு கேட்டு, அவரை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து பாண்டியன் அங்கிருந்த பொதுமக்களுடன் சேர்ந்து அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

அப்போது திருநெடுங்குளம் பகுதி இளைஞர்கள் அந்த காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஆனால் அந்த கும்பல் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இது குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் அங்கு வந்து, பாண்டியனை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ேமலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story