நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்


நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 May 2024 10:55 AM IST (Updated: 13 May 2024 12:03 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாசல், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட போதிலும் விசாரணையை காவல்துறையினரே சீர்குலைத்ததாகவும், அவரது விடுதலைக்கு காவல்துறையினரே காரணமாக இருந்ததாகவும் நீதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பாசல் கைது செய்யப்பட்ட இருமுறையும் அவரிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் மாதிரிகள் கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. முதல் முறை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 2015 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இரண்டாம் முறை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, காவல்நிலையம் இடமாற்றம் செய்யப்படும் போது காணாமல் போய்விட்டதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது. கஞ்சா வழக்குகளில் 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை மீறி, முதல் வழக்கில் 5 ஆண்டுகள் கழித்தும், இரண்டாம் வழக்கில் 14 மாதங்கள் கழித்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் இத்தகைய குளறுபடிகளால் தான் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாசல் வழக்கில் மட்டும் தான் இத்தகைய குளறுபடிகள் நடந்ததாக கூற முடியாது. பெரும்பான்மையான கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து கடத்தல் வழக்குகளில் காவல்துறையினர் இத்தகைய தவறுகளை செய்ததாக காவல்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற கண்ணப்பன் பல தருணங்களில் கூறியுள்ளார். போதை மருந்துக் கடத்தல்காரர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கும் இடையே கூட்டணி இருப்பதையே இது காட்டுகிறது. இந்தக் கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கஞ்சா வணிகத்தை ஒடுக்குவதற்காக காவல்துறை பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டும் கூட, எந்தப் பயனும் ஏற்படாததற்கு காவல்துறையில் உள்ள சிலருடன் கஞ்சா வணிகர்கள் அமைத்துள்ள கூட்டணி தான் காரணம் ஆகும். காவல்துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது.

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா கடத்தல் வழக்குகளின் விசாரணைகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் நிலையிலான சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகத்திற்கு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Next Story