ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை - தலைமறைவான மாணவியின் உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு


ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை - தலைமறைவான மாணவியின் உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
x

சிறுமியை கொலை செய்த ரஜ்னேஷ் குட்டன், வனப்பகுதியில் இருந்து தனது காரில் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார். இவர் அந்த மாணவியின் உறவினர் என்றும், அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ரஜ்னேஷ் குட்டன், மாணவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி தனது காரில் ஏற்றியுள்ளார். பின்னர் அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் காரை கொண்டு சென்ற ரஜ்னேஷ் குட்டன், அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இதனிடையே பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால், அவளது உறவினர்கள் அப்பகுதி முழுவதும் சிறுமியை தேடத்தொடங்கியுள்ளனர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து ரஜ்னேஷ் குட்டன் தனது காரில் வெளியே வந்துள்ளார். அவரிடம் சிறுமியைப் பற்றி விசாரித்த போது முன்னுக்கிப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது, அங்கு சிறுமி இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஜ்னேஷ் குட்டம் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவர் வனப்பகுதியில் இருந்து தனது காரில் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story