மங்களூரு கல்லூரியில் இருந்து தப்பியோடிய மாணவிகள் சென்னையில் மீட்பு


மங்களூரு கல்லூரியில் இருந்து தப்பியோடிய மாணவிகள் சென்னையில் மீட்பு
x

மங்களூரு கல்லூரியில் இருந்து தப்பியோடிய 3 மாணவிகளும் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் விமான நிலைய சாலையில் தனியாருக்கு சொந்தமான பி.யூ.கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பெங்களூருவை சேர்ந்த 2 மாணவிகளும், சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் தோழிகள் ஆவார்கள்.

இதனிடையே, மாணவிகள் 3 பேரும் கடந்த 20-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், கல்லூரி விடுதியின் ஜன்னலை உடைத்து அங்கிருந்து தங்களுடைய உடைமைகளை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து விடுதியில் 3 மாணவிகள் மாயமானதை அறிந்த விடுதி காவலர் மாணவிகளின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் மாணவிகள் புத்தகத்தில் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் பெற்றோரை எதிர்கொள்ள முடியாது `நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறாம், எங்களை மன்னிக்கவும்' என்று எழுதி வைத்துவிட்டு விடுதி வளாகத்தை விட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மாணவிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மங்களூரு கல்லூரி விடுதியில் இருந்து தப்பியோடிய 3 மாணவிகளும் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மாணவிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மங்களூரு கல்லூரியில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 3 மாணவிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார் இது குறித்து மங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து 3 மாணவிகளையும் மங்களூருவுக்கு அழைத்து செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story