குலோப் ஜாமுன் விலையை குறைக்க கூறி கடைக்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது


குலோப் ஜாமுன் விலையை குறைக்க கூறி கடைக்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது
x

மடிப்பாக்கத்தில் குலோப் ஜாமுன் விலையை குறைக்க கூறி கடைக்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுவீட் கடை உள்ளது. இந்த கடைக்கு வந்த 2 பேர், குலோப் ஜாமுன் விலை கேட்டனர். அதற்கு கடையின் உரிமை யாளர் லோகேஷ்கான் (வயது 24), ரூ.100 என கூறினார்.

உடனே 2 பேரும், "உள்ளூர்காரர்கள் எங்களுக்கு ரூ.100 என கூறுவதா? குலோப் ஜாமுன் விலையை குறைத்து தரவேண்டும்" என கேட்டனர். அதற்கு லோகேஷ்கான் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், லோகேஷ்கானை கடைக்குள் தள்ளி, இருவரும் உள்ளே புகுந்து 'பளார் பளார்' என மாறி, மாறி அவரது கன்னத்தில் அறைந்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட லோகேஷ்கான், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்காரரை தாக்கிய மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி (28) என்பவரை கைது செய்தனர். இவர், ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருவது தெரிந்தது. தலைமறைவாக உள்ள மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story