நல்ல செய்தி தாமதமாகத்தான் வரும் - கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு


நல்ல செய்தி தாமதமாகத்தான் வரும் - கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு
x

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கி மதுரையில் தனது கட்சி பெயரை அறிவித்தார். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டுப்போடாதவர்கள்தான் என்னை கேள்வி கேட்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம். நாட்டில் 40 சதவீதம் மக்கள் வாக்களிப்பதே இல்லை.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஆணிப்படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிரிப்படையை நடத்துவதுபோல மத்திய அரசு நடத்துகிறது. விவசாயிகளுக்கு மாநில அரசு செய்ததை கூட மத்திய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.

நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். ஆனால் போக வைப்பது அதைவிட கடினம். எனது சொந்த காசில்தான் அரசியல் செய்து வருகிறேன். என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது. அதில் அழுத்தமாக நடைபோடுவேன். ஓட்டுக்காக காசு வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை ஒழியும்.

அனைத்து மாநிலங்களுக்கும் சமநிலையான நிதி பகிர்வு வேண்டும். 6 ஆண்டு கால அரசியல் பயணம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக்கொடுத்துள்ளது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். நல்ல செய்தி தாமதமாகத்தான் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story