சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு


சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
x

சட்டசபையில் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது.

கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். கவர்னரின் செயலாளர் குமார் ஜெயந்தும் உடன் வருகிறார். சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

சரியாக, காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்குகிறது. காலை 10.02 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குவார். சுமார் 40 நிமிடங்கள் அவரது உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, கவர்னர் உரையிலும் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அந்த வகையில், இன்றைய கவர்னர் உரையிலும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

இந்த விவாதம் 23-ந்தேதி வரை நடக்க வாய்ப்பு இருக்கிறது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார்.

அத்துடன், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும். பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதமும் தொடர்ந்து நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.


Next Story