செஸ் ஒலிம்பியாட் நாளை தொடக்கம்: செஸ் வீரர்களுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளதையொட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகமே ஒரு பெரிய குடும்பம் என்ற உண்மையான உணர்வோடு போட்டியில் பங்கேற்று புதிய வரையறையை படைப்போம்.
இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், உலகின் பிற பகுதிகளில் இருந்தும் வரும் செஸ் வீரர்களை வரவேற்கிறேன். வரலாற்று மற்றும் கலாசார தளங்களை பார்வையிடவும், தமிழ்நாட்டின் காலமற்ற, தெளிவான மற்றும் துடிப்பான ஆன்மிக செழுமையின் ஒரு பகுதியாக இருக்கவும் அனைவரையும் அழைக்கிறேன்.
உலகளாவிய தொற்றுநோயின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை, புதிய மாறுபாடுகள், புதிய சவால்களை முன்வைக்கின்றன. எனவே, பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வழிகாட்டுதல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாபெரும் செஸ் போட்டியில் பங்கேற்க வந்த அனைவரையும் வரவேற்கிறேன், அனைவரும் சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும், மறக்கமுடியாததாகவும் தங்கி திரும்பவும் வாழ்த்துகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.