கவர்னரின் செயல் வேதனை அளிக்கிறது... சபாநாயகர் அப்பாவு பேட்டி


கவர்னரின் செயல் வேதனை அளிக்கிறது... சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

கோப்புப்படம் 

பல பிரச்சனைகள உருவாக்கும் வகையில் கவர்னர் நடந்துகொண்டிருப்பது வேதனை அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.

சென்னை,

சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற வாக்கியத்தையும் கவர்னர்தவிர்த்துள்ளார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் செயலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன. மேலும், கவர்னர் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் உரை. ஒப்புதல் அளித்துவிட்டு பேரவையில் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக, அவை நடவடிக்கைகள் முடியும் முன்னரே கவர்னர் வெளியேறியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரையே கவர்னர் உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

திராவிட மாடல் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவில்லை. பல பிரச்சனைகள உருவாக்கும் வகையில் கவர்னர் நடந்துகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. இந்திய அரசிலமைப்பின்படி நமது மாநிலத்திற்கு தலைவர் அவர்தான். அவர் நமக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும். இதுபோன்று பல சமயங்களில் அவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டிருக்கிறார். இதை வேதனையுடன் விமர்சனமாகவே சொல்கிறேன். இதை அவர் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கவர்னர் உரையை ஒப்புதலுக்காக அவருக்கு கடந்த 5ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அவர் 7ம் தேதி ஒப்புதல் அளித்துவிட்டார். அப்போதே 'இதில் சில வார்த்தைகள் உடன்பாடில்லை மாற்றுங்கள்' என்று கூறினால், முதல்வரும், அரசாங்கமும் அதற்கேற்ப முடிவு எடுத்திருக்கும். அதையெல்லாம் செய்யாமல், பொது மேடையில் பேசுவதுபோல் பேசுவது நாகரிகம் அல்ல.

அதேபோல் பாராளுமன்ற ஜனநாயகத்தின்படிதான் நாம் நடக்கிறோம். பாராளுமன்றத்தில் மத்திய அரசால் எழுதிக்கொடுக்கும் உரையைத்தான் ஜனாதிபதி வாசிக்கிறார். ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே வாசிக்கிறார். மசோதாக்களுக்கும் தாமதம் இன்றி ஒப்புதல் அளிக்கிறார்.

ஆனால் தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக பதில் அளிப்பதில்லை, ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் எதற்காக இதுபோன்று நடந்துகொள்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.


Next Story