ஆசிய ஆக்கி போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்


ஆசிய ஆக்கி போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2023 2:56 PM IST (Updated: 2 Aug 2023 3:25 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம், நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டிகளை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். போட்டிகளைப் போல் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் 'பேன் பார்க்ஸ்' ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story