ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
x

கோப்புப்படம் 

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில் செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன.

ஆதலால் இந்நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45-வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

1. வரி விகிதங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல்.

2. தற்போதைய வரி விகிதங்களை மறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்-மந்திரி ஒருங்கிணைப்பாளராகவும், பீகார், கோவா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இக்குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை. இக்குழு தனது பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.

அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் இவை மீதான வரி விதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680/ஆ1 / 2021-இல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு எழுத்துப் பூர்வமாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியால் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. 2022 ஜூன் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் சண்டிகரில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தின் 47-வது கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்கு பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார். உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கருத்தொற்றுமை முடிவின் படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story