நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம்: ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்; கவர்னரிடம் பா.ஜனதா மனு


நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம்: ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்; கவர்னரிடம் பா.ஜனதா மனு
x
தினத்தந்தி 23 April 2023 9:15 PM GMT (Updated: 23 April 2023 9:15 PM GMT)

நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடன் பா.ஜனதாவினர் மனு அளித்து உள்ளனர்.

கவர்னரிடம் மனு

தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆடியோ போலியானது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், தமிழக பா.ஜனதா சார்பில் இந்த ஆடியோ குறித்த உண்மை தன்மையை ஆராயக்கோரி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், தமிழக பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தணிக்கை அறிக்கை

இதைத்தொடர்ந்து, வி.பி.துரைசாமி மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா சார்பில் ஒரு மனுவை அளித்துள்ளோம். அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் ஊழல் வழியாக ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்து வைத்துள்ளார்கள் என்ற வார்த்தையை குறிப்பிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செல்போன் உரையாடலில் பேசியுள்ளார். நேற்று முன்தினம் அது என்னுடைய குரல் அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து சுதந்திரமான தடயவியல் விசாரணை செய்ய வேண்டும். இது அவருடைய குரல் தானா என்று கண்டறிந்து தணிக்கை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுள்ளோம்.

விசாரணை ஆணையம்

கவர்னர்தான் அரசாங்கத்தின் தலைவர். எனவே, அவரிடம் மனு அளித்துள்ளோம். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கட்டும். தமிழக மக்களின் வரிப்பணம் அரசின் கஜானாவிற்கு செல்லாமல் இவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பதே எங்களின் குற்றச்சாட்டு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், பழனிவேல் தியாகராஜனையும் பிரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

பழனிவேல் தியாகராஜனை நாங்கள் 'டார்கெட்' செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது?. கவர்னர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். தனிநபர் ஆணையம் அமைத்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அந்த உரையாடலில் இருப்பது அவருடைய குரல்தான் என்று அடித்து சொல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அண்ணாமலை அறிக்கை

இதுகுறித்து பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆடியோவில் உள்ளது தனது குரல் இல்லை என்று நிதி அமைச்சர் மறுத்து வருகிறார். அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துகளை நான் (அண்ணாமலை) பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார்.

தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் கோர்ட்டின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். 2 ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, கோர்ட்டு விசாரித்து கூறட்டும்.

நீங்கள் சொல்லும் விசித்திர கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் தி.மு.க.வினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நிதியமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story