மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் டிசம்பர்-3 இயக்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு டிசம்பர்- 3 இயக்க மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தீபக், மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ், மாநில துணை பொதுச்செயலாளர்கள் ஷேக்முகமது, ஜெயப்பிரகாஷ், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், மகளிரணி செயலாளர் தமிழரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோரிக்கைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள 377 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சுயதொழிலான ஆவின் பாலகம் கடை வைப்பதற்கு அரசு கட்டிடங்களில் இடம் ஒதுக்கீடு செய்துதர வேண்டும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு செல்லும் சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும், 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென்ற திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை சிறப்பு பள்ளியில் சேர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தங்கராசு, சந்தோஷ், சந்தானம், ஆறுமுகம், நாராயணி, நாவப்பன், சுதாகர், ராணி, மாலா, சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக பெருந்திட்ட வளாகம் நோக்கி வந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்க முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் பழனியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story