தண்டையார்பேட்டையில் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியவர், பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலி


தண்டையார்பேட்டையில் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியவர், பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலி
x

தண்டையார்பேட்டையில் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியவர், பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார்.

சென்னை

செங்குன்றத்தில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக திருவொற்றியூருக்கு நேற்று மாநகர பஸ்(தடம் எண் 157) சென்று கொண்டிருந்தது. பஸ்சை மாதவரம் பொன்னியம்மன் மேடு ஏழுமலை தெருவைச் சேர்ந்த டிரைவர் நடராஜன் (வயது 43) ஓட்டினார். கண்டக்டராக திருப்போரூரைச் சேர்ந்த சண்முகம் (42) பணியில் இருந்தார். தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் வந்த போது ஓடும் பஸ்சில் இருந்து பயணி ஒருவர் முன்பக்க வாசல் வழியாக கீழே குதித்து இறங்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது அதே பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பயணி உயிரிழந்தார்.

இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த ரமேஷ்(40) என்பதும் தெரியவந்தது. இதுபற்றி பஸ் டிரைவர் நடராஜனிடம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story