கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழை


கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழை
x

கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வெப்பக்காற்று

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதை போல் வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் அவ்வப்போது மழை பெய்து வெப்பத்தை தணித்து வந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. முன்னதாக கும்பகோணத்தில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

கொட்டித்தீர்த்த கன மழை

இதை தொடா்ந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் மோதிலால் தெரு, காமராஜர் சாலை, மகாமககுளம் 4 கரைகள், அரசு பெண்கள் கல்லூரி செல்லும் சாலை, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

சில இடங்களில் கழிவு வடிகால் நிரம்பி சாலைகளில் கழிவுநீர், மழைநீருடன் கலந்து ஓடியது. கும்பகோணம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. தேங்கிய மழைநீரில் பெண்கள், மாணவிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கல்லூரி மாணவிகள் மழையில் நனைந்து கொண்டு பஸ் நிலையத்திற்கு சென்றனர். சிலர் சாலையோரங்களில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள், சிறு, சிறு கடைகளில் ஒதுங்கி நின்றனர். மழையின் போது பலத்த. காற்றும் வீசியதால் இருசக்கர வாகனங்களில் குடைபிடித்தப்படி சென்றவர்கள் அவதிப்பட்டனர். சிலரது குடைகள் காற்றின் வேகத்தில் கிழிந்து போனது.

அரை மணிநேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடந்து வருவதால் இந்த மழை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை பகுதியில் சில நாட்களாக மதியம் மற்றும் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சூலமங்கலம், மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம், உள்ளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் சம்பா சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மெலட்டூர்

இருப்பினும் இந்த மழையால் பின் பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சில சம்பா சாகுபடி நடவு வயல்களில் மழை தண்ணீர் தேங்கியிருப்பதாகவும், மழை தொடர்ந்தால் பயிர்கள் மூழ்கும் என விவசாயிகள் கவலை அடைந்தனர்.மெலட்டூர், திருக்கருகாவூர், சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 2-வது நாளாக நேற்று பலத்த மழை பய்தது.


Next Story