தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இரண்டு மணி் நேரம் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. காலை முதலே மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று மாலைநேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, அண்ணாசாலை, செண்பகனூர், பிரகாசபுரம், மூஞ்சிக்கல், ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு நேரத்தில் திடீரென மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் கள்ளக்குறிச்சி சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.